கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனாவில் கோரத்தாண்டவம் இதுவரை குறையவில்லை. 2021ன் தொடக்கத்தில் மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை மீண்டும் பொதுமக்களை முடக்கியுள்ளது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்க அரசு அதிகம் நம்பியுள்ள ஒரு விஷயம் தடுப்பூசி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் கொரோனாவின் தாக்கத்தை இந்தியாவில் இருந்து அகற்றும் என அரசு வலியுறுத்தி வருகிறது. 




இதற்காக பல நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியுள்ளது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி, பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என அறிவித்த அரசு, மே1 முதல் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக முன்பதிவு செய்ய Covin இணையதளத்தையும் அரசு அறிமுகம் செய்தது. இந்த இணையதளத்தில்  இடம், நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்தால் போதுமானது எனக் கூறப்பட்டது. ஆனால் தொடக்க நாளிலேயே பல லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளம் முடங்கியது. சிலருக்கு ஓடிபி பிரச்னை ஏற்பட்டது. 


இதற்கிடையே கொரோனா தடுப்பூசியை கணக்கிட்ட ஒரு கும்பல் மால்வேர் வைரஸை இந்திய பயனர்களின் செல்போனில் செலுத்த முயற்சி செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலரது செல்போனுக்கும் எஸ் எம் எஸ் வாயிலாக கொரோனா தடுப்பூசி இலவசம், எளிதான முன்பதிவு போன்ற தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களை நம்பி க்ளிக் செய்து பதிவு செய்யும் பயனாளர்களின் செல்போன்களில் மால்வேர் வைரஸ் ஊடுறுவும். இந்த வைரஸ் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர்கள் திருடக்கூடும். அதேபோல் பயனர்களின் அனுமதியின்றி தகவல்களை அழிக்கவும் முடியும். உங்களது சமூக வலைதள கணக்குகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த வைரஸ் மிகப்பெரிய பிரச்னையை உண்டாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




மால்வேர் தடுப்பு அணி இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சைபர் கிரைமும் இந்த மால்வேர் வைரஸ் குறித்து உறுதியாக தகவலை குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. ஒருவரின் செல்போனில் நுழையும் மால்வேர் அவரின் காண்டக்ட் லிஸ்டில் உள்ள செல்போன் எண்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து எஸ் எம் எஸ்களை அனுப்புகிறது. ஒரு சங்கிலித்தொடர் போல இது தொடர்கிறது. எனவே பொதுமக்கள் அரசு குறிப்பிட்டுள்ள சரியான இணையதளத்தில் மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவை பதிவிட்டுக்கொள்ள வேண்டும் என்றும், செல்போனுக்கு வரும் தேவையற்ற, மர்மமான எஸ் எம் எஸ்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


கொரோனா பிரச்னையே பெரும்பிரச்னையாக இருக்கும் நிலையில் அதை வைத்து ஊடுருவும் இது போன்ற பிரச்னைகள் உண்மையில் தலைவலியே. ஏதாவது ஒருவகையில் இணையப்பயன்பாட்டாளர்களுக்கு பிரச்னை தரும் வகையிலம் வலம் வரும் இது போன்ற வைரஸர்களை கட்டுப்படுத்துவதே உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது.