ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவத்தை வெளியேற்றிய நிலையில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தலிபான்கள் தங்களது ஆட்சியை அங்கு அமைத்துவிட்டனர். மேலும் காபூல் உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தலிபான்களால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களது ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை  அளிக்கிறோம் என்று கூறினாலும், முன்பு உள்ளது போல அவர்களை அடிமையாக பார்க்கும் வழக்கம் குறையவில்லை. இதோடு பல வன்முறைகள் அரங்கேறிய நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். உயிர் தப்பினால் போதும் என்ற மனநிலையில் விமானநிலையங்களில் விமானத்தில் இடம் பிடிப்பதற்கு முந்தி சென்ற நிலையெல்லாம் ஏற்பட்டது.





இந்த சூழலில் தான் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன் போன்ற நாடுகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அவரவர் நாட்டு மக்களை அங்கிருந்து விமானங்களின் மூலம் தாயகம் அழைத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவைப்பொறுத்தவரை கடந்த 15 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை , இந்திய விமானப்படையின் உதவியோடு மீட்டு வருகின்றனர். இப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக வந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்க கொரோனா சோதனை மேற்கொண்ட நிலையில், இருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து கத்தார் ராணுவ முகாமக்கு அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள், இந்திய தூதரகம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் கொரோனா பாதிக்கப்பட்ட இரு நபர்களையும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு அதிகாரி ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இவர்களுடன் பயணித்த மற்ற பயணிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காபூலில் இருந்து தங்கள் குடிமக்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்தியா ஆப்கானிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நேபாள நாட்டவர்கள் உட்பட பலர் இந்தியா விமானப்படை மூலம் அழைத்து வரப்பட்டனர்.  மேலும் தாலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் தலைதூக்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக விமானங்களின் மூலம் அந்நாட்டு மக்கள் வெளியேறிவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர், எக்காரணம் கொண்டும் அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறும் நடவடிக்கையினை கைவிடமாட்டோம் என்று கூறியுள்ளார்.





இதற்கிடையில் தலிபான்கள் தங்களது ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அரசு ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை பணியிலிருந்து வெளியேற்றினர். மேலும் முந்தைய தாலிபான்கள் ஆட்சியில் இருந்தமைப்போன்று பெண்களுக்கு கல்வி, சுதந்திரம் போன்றவை கிடைக்கப்பெறாது என பெண்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.