இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு கடந்த மே மாதம் 3.50 லட்சம் என்ற அளவில் பதிவாகி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரண்டாவது அலையை விட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த நிலையில், கொரோனா பரவலின் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்தவ ஆராய்ச்சி கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்.) மூத்த மருத்துவர் பேராசிரியர் சமிரன் பாண்டா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோய் பிரிவு இயக்குனராக தற்போது பொறுப்பு வகித்து வரும் சமிரன் பாண்டா விடுத்துள்ள எச்சரிக்கையில், சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் மற்றும மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாவிற்கு அனுமதிப்பது மூலம் இந்த மோசமான சூழல் முடிந்துவிட்டது போன்ற தோற்றம் உள்ளது.




கொரோனா வைரசின் மூன்றாவது அலை இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது, இந்தியா முழுவதும் தினசரி 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.  உருமாறாத கொரோனா வைரசாக இருந்தால் கொரோனாவின் பாதிப்பு முதல் அலையைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே உருமாறிய கொரோனா வைரசாக இருந்தால் கண்டிப்பாக நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்.


கொரோனா இரண்டாவது அலை போல, கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தாது. ஆனால், தடுப்பூசிகளை குறைவாக செலுத்திக் கொள்வதும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் நாட்டில் கொரோனா பாதிப்பு வீதத்தை அதிகரிக்கும். தற்போதுள்ள சூழலைப் பார்க்கும்போது நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படக்கூடும்.


பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது மற்றும் முகக்கவசம் அணிவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும். இந்தியாவிற்கு ஒரு நோய்த்தடுப்பு திட்டம் தேவைப்படுகிறது. மக்கள் பயணங்கள் செய்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும். ஏனென்றால் இது மக்கள் அடர்த்தி மாற்றங்களை ஏற்படுத்துகிறது.




86 சதவீத பாதிப்பு டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பையும், மூன்றாவது அலை ஆபத்தையும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மூலம் குறைக்க முடியும். “ இவ்வாறு அவர் கூறியுள்ளார். மற்றொரு மூத்த மருத்துவர் வி.கே.பால் விடுத்துள்ள எச்சரிக்கையில், கொரோனா வைரசால் நாட்டில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் மோசமான சூழல் நிலவும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் மகாராஷ்ட்ரா, டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரள, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.