இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாள் தோறும் பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தினை அடைந்துவருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகா, போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெறாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் தினமும் அவதிப்பட்டுவருகின்றனர்.


இந்நிலையில் தான் உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வைத்துள்ளனர். மேலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும முயற்சியாக தமிழகம், டெல்லி, கேரளம், கர்நாடக போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கினை தற்போது அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா கால ஊரடங்கி அமல்படுத்தியும் எந்த வித பலனும் இல்லாத காரணத்தினால் முழு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுகிறது என மாநில முதல்அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை அடைக்க உத்தரவிட்டதோடு, பொது வெளியில் அநாவசியமாக சுற்றித்திரிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவந்தாலும் எந்த பலனும் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. தினமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும் தகவலின் படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு 4,092 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் புதிதாக 4 லட்சத்து 3738 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக உயிரிழந்துள்ளது.


மேலும் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா தொற்றினை சமாளிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தெரிவித்து வரும் நிலையில், , நாட்டின் இதுவரை 16,94,39,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் இந்த சூழலில் தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கொரோனா நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.