கிட்கேட் சாக்லேட் ரேப்பர்களில் (KItkat) ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
நெஸ்லே இந்தியாவின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று தான் கிட்கேட் ( (KItkat). பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சாக்லேட்களைத் தயாரிக்கும் நிறுவனம் தான் தற்போது சமூக ஊடகங்களின் கோபத்திற்கு ஆளானது. ஏன் தெரியுமா? ஒவ்வொரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கும் ஈர்க்கும் விதமாக பல்வேறு விளம்பர யுக்திகளை கையாள்வர்கள். குறிப்பாக கலர்புல்லான விளம்பரங்கள், கலர்புல்லான சாக்லேட் கவர்கள் மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள்தான் முக்கிய பங்காற்றும்.
இப்படி ஒரு புதுவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டதன் விளைவு தான் தற்போது நெஸ்லே இந்தியா சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருப்பதோடு, நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. ஆம் கிட்கேட் ராப்பரில் பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என பலர் கேள்வி எழுப்பலாம்.
ஆனால் நெட்டிசன்களின் கூற்றுப்படி, நாம் மிகவும் மதிக்கப்படும் எந்த தெய்வங்களின் புகைப்படங்களாக இருந்தால் இதனை சாக்லேட் ராப்பரில் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கின்றனர். ஏனென்றால் என்ன தான் விலையுயர்ந்த சாக்லேட்டுகளை நாம் வாங்கி சாப்பிட்டாலும், சாக்லேட்கள் தீர்ந்ததும் சாக்லேட் கவர்களை சாலை அல்லது குப்பைத்தொட்டிகளில் போட்டுவிடுவோம். இதனால் நம் தெய்வங்களை மக்கள் தெரியாமல் மிதித்து செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இதனை உடனே அகற்றும்படி சோசியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
மற்றொரு பயனர், உடனடியாக சாக்கேட் கவரில் உள்ள பகவான் ஜெகன்நாத், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா போன்றவற்றின் புகைப்படங்களை அகற்றிடுங்கள் என்று கூறியுள்ளார். இல்லாவிடில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இதற்கு பதிலளிக்கும் விதமாக நெஸ்லே நிறுவனம் டிவிட்டரில்,நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை எனவும், கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரே இதுப்போன்று புகைப்படங்களை சாக்லேட் கவர்களில் பயன்படுத்தியதாகவும் பதிவிட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ஒடிசாவின் முக்கிய பண்டிகைக்கு குறித்து ரேப்பர் வெளியிட்டதாகவும், மக்கள் எதிர்த்த நிலையில் திரும்பப்பெற்றதாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.