சனாதனம் பற்றிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.


உதயநிதி பேசியது என்ன?


சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார். சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக சனாதனம் உள்ளது என்றும் டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.


காங்கிரஸ் பதில்:


இந்த நிலையில், உதயநிதியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய வேணுகோபால், ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு என்றார்.


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "எங்கள் பார்வை தெளிவாக உள்ளது. ‘சர்வ தர்ம சமபவ’ (அனைத்து மதங்களுக்கும் மரியாதை தருவது) என்பது காங்கிரஸின் சித்தாந்தம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் உண்டு. அனைவரின் நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்" என்றார்.


இதற்கிடையே, உதயநிதியின் விமர்சனம் குறித்து பதில் அளித்த கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே, "சமத்துவத்தை வளர்க்காத அல்லது மனிதனாக மதிக்க கற்று கொடுக்காத எந்த மதமும் என்னைப் பொறுத்தவரை மதம் அல்ல. மக்களை சமத்துவத்துடன் நடத்தாத எந்த மதமும் ஒரு நோயைப் போன்றதுதான்" என்றார்.


நேற்று, உதயநிதியின் கருத்தை விமர்சித்து பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "குடும்ப அரசியல் செய்யும் இவர்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டு, தங்களை பணக்காரர்களாக ஆக்கி, மக்களை எப்போதும் ஏழைகளாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் வைத்திருக்கின்றனர். குடும்ப அரசியல் செய்யும் இவர்கள், உண்மையிலேயே ஒட்டுண்ணிகள். பல ஆண்டுகளாக மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி நமது தேசத்தையும் மக்களின் செல்வத்தையும் உறிஞ்சி எடுத்துள்ளனர்.

 

தங்களின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தை மறைத்து, அவர்கள் "திராவிட நிலத்தைப் பாதுகாக்கிறோம்" போன்ற கதைகளை உருவாக்கி இந்து மத நம்பிக்கையை அவமதக்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கும் ஒரே விஷயம் அவர்களின் சொந்த சொத்தும் அரசியலும்தான். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த 1 சதவகிதத்தை கூட இவர்கள் செய்யவில்லை" என்றார்.