கர்நாடகா பெங்களூருவில் உள்ள சில பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில், ​​​​தோசையைச் சாப்பிடுவதற்காக உணவகங்கள், உணவகங்களாக சென்று சுற்றித் திரிந்த பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யாவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.






உணவகங்களை பிரபலமாக்குவதற்காக மட்டுமே தேஜஸ்வி சூர்யா கவலைப்படுகிறார் என்றும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. அவரை கலாய்க்கும் வகையில், நகரத்தில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து பத்து வெவ்வேறு தோசைகளை காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு அனுப்பினர்.


வைரலாகி வரும் வீடியோவில், காங்கிரஸ் தொண்டர்கள் 10 தோசைகளை ஆர்டர் செய்து, வீட்டுக்கே டெலிவரி செய்யும் செயலி மூலம் எம்பி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் சமூக ஊடகங்களில், “தேஜஸ்வி சூர்யா தனது கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்றதாத நடந்து கொள்வதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 


பெங்களூருவின் சிறந்த ஹோட்டல்களில் இருந்து அவருக்கு 10 விதமான தோசைகள் பார்சல் அனுப்பப்பட்டது. அவருக்கு இந்த இலவச தோசை கிடைக்கட்டும். ஹோட்டலுக்கு மார்க்கெட்டிங் செய்வது பற்றியும் அவரது நாடாளுமன்ற மக்களுக்கான வேலை பற்றியும் கவலைப்பட வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, பெங்களூரு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் சமயத்தில், மசாலா தோசைக்கு ரிவ்யூ கொடுப்பதற்காக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உணவகத்திற்குச் சென்றதற்காக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். தேஜஸ்வி, தோசையை ருசிக்கும் வீடியோவைப் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், மசாலா தோசை சாப்பிடும் தேஜஸ்வி சூர்யா “இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றைப் பார்த்துவிட்டு, பத்மநாபநகரில் இந்த ‘பென்னே மசாலா தோசை’யை முயற்சிக்க வந்துள்ளேன். இந்த தோசை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அனைவரும் உப்மாவையும் ருசித்து பார்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.


செப்டம்பர் 5 ஆம் தேதி, பெங்களூரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக லாவண்யா கூறியுள்ளார்.