மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் கூட இல்லாத நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்த போதிலும், ஒரு சில விவகாரங்கள் எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.


டெல்லி அவசர சட்டம் விவகாரம்:


அந்த வகையில், டெல்லி அவசர சட்டம் விவகாரம், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே பிரச்னையாக வெடித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மத்திய பாஜக அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவலியாக மாறியது.


மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் இது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முட்டிக்கட்டை போட்ட பிரச்னை:


இந்த பிரச்னை, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் எதிரொலித்தது. அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஆம் ஆத்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.


ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் தனது நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளது. அதற்கு காரணம், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், அவசர சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களிலும், ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அதை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ்.


இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வந்தது. இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்து கொள்ளுமா? இல்லையா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.


அதிரடி முடிவு எடுத்த காங்கிரஸ்:


இந்த நிலையில், அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ், அதிரடி முடிவை எடுத்துள்ளது. அவசர சட்டத்திற்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் முடிவை செய்தியாளர்களிடம் விளக்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால், "நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்து கொள்ளும் என நினைக்கிறேன். அவசர சட்ட விவகாரத்தில் எங்களின் நிலைபாடு தெளிவாக உள்ளது. நாங்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை" என்றார்.


இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளனர்.


அவசர சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தனது நிலைபாட்டை அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இது பெரும் ஊக்கத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது.