வரும் 28ஆம் தேதி, பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட பிறகு மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் 'செங்கோல்' நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோலை இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பெற்று கொண்டு, அதை நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கியதாக மத்திய அரசு கூறியிருந்தது.


சர்ச்சையை கிளப்பும் செங்கோல்:


இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் ஆலோசனைபேரில், திருவாவடுதுறை ஆதீனத்தின் வழிகாட்டுதலில், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் நேரு செங்கோலை பெற்று கொண்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டிருந்தது. சோழர் காலத்தில் ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் போது இம்மாதிரியான செங்கோல் வழங்கப்படுவது வழக்கம்.


அதை பிரதிபலிக்கும் வகையில், சுதந்திரம் பெற்ற நாள் அன்று, செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. செங்கோல் பற்றி மத்திய அரசு தகவல் வெளியிட்டதில் இருந்தே அதை சுற்றி பல்வேறு விதமான தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.


வரலாற்றாசிரியர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி:


ஆனால், மத்திய அரசு வெளியிட்ட தகவலுக்கு போதுமான ஆதாரம் இல்லை என வரலாற்றாசிரியர்கள் முதல் காங்கிரஸ் கட்சி வரை மறுப்பு தெரிவித்து வருகிறது. செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது உண்மை, ஆனால், அது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர், ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை என அவர் கூறியுள்ளார்.


உடைத்து பேசும் காங்கிரஸ்:


"வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் தவறான செய்திகளுடன் புதிய நாடாளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியம் உண்டா? வரலாற்றை திரித்து எழுதும் பாஜக/ஆர்எஸ்எஸ்காரர்கள், அதிகபட்ச கூற்றுக்களை கூறி குறைந்தபட்ச ஆதாரங்களை தந்து மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்.


மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர், ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுதொடர்பான அனைத்து தகவல்களும் பொய். முழுக்க முழுக்க ஒரு சிலரின் மனதில் உற்பத்தியாகி வாட்ஸ்அப்பில் பரவி, இப்போது ஊடகங்களில் விளம்பரதாரர்கள் வழியாக பரப்பப்படுகிறது.


ராஜாஜி தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் இரண்டு சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசின் தகவல் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பயன் அடைய இந்த செங்கோல் நிகழ்ச்சியை பிரதமர் மோடியும் அவரது விளம்பரதாரர்களும் பயன்படுத்தி வருகின்றனர்" என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.