நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் முடிவு என  முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். 


டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.


"புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல" என அவர் தெரிவித்தார். இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், உள்ளிட்ட 7 கட்சிகள், பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


நாங்கள் ஒன்றும் காங்கிரசின் அடிமை இல்லை எனவும், நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


முன்னதாக டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர்  மோடி, வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.


 புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.  இது தொடர்பாக இந்த கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு அழைக்காததன் மூலம், அவரை அவமதித்திருப்பது மட்டும் அல்லாமல், ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கொரோனா காலத்திலும் அதிக பொருட் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நாட்டு மக்களிடமோ, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ கருத்து கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மாவை அகற்றிவிட்ட நிலையில், புதிய கட்டடத்திற்கு மதிப்பு இல்லை என்றும், இதன் காரணமாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் 19  கட்சிகள் ஏற்கனவே கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.