சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் இயல்பான ஒன்றே. ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், தன்பாலின திருமணத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்பட பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.
இந்தியாவில் தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், அது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் தீர்ப்பு வெளியான பிறகும், காங்கிரஸ் தனது நிலைபாட்டை அறிவிக்காமல் இருந்தது. தன்பாலின திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தன்பாலின தம்பதிகள் சேர்ந்து வாழ சட்டம்:
இந்த நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. அக்கட்சி நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தன்பாலின தம்பதிகள் ஒன்றாக வாழ சட்டம் இயற்றப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தன்பாலின தம்பதிகளுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பல முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய வாக்குறுதிகள்:
கல்வியிலும் அரசின் வேலைவாய்ப்புகளில் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பு தளர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
அதோடு, தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படும் என்றும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள், சட்ட அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் வாரியங்களில் இயக்குநர்கள் போன்ற உயர் பதவிகளில் அதிகமான பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் வாழ்ந்து வருவதற்கு சட்டம் இயற்றப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கு தன்பாலின ஈர்ப்பாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.