மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக எடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆபாச வீடியோ விவகாரம்:
பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் அபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சர்ச்சையை கிளப்பியுள்ள ஆபாச வீடியோக்களில் சில பெண் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றிருப்பது பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க செய்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
அதோடு, அவரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு அளிக்கப்பட்ட தூதரக பாஸ்போர்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார்.
கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட கர்நாடக காவல்துறை:
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மட்டும் இன்றி அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண் தற்போது அங்கு வேலை செய்யவில்லை என்றும் ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களில் அவரும் ஒருவர் என கூறப்படுகிறது.
அந்த பெண்ணை சதீஸ் பாபு என்பவர் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளார். அவரை அழைத்து வர சொன்னவர் ரேவண்ணா எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அழைத்து செல்லப்பட்டதில் இருந்து அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்திருந்தார்.
நடந்தது என்ன?
கடத்தப்பட்ட அந்த பெண்ணை கர்நாடக காவல்துறை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக கர்நாடக காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அந்த பெண்ணுக்கு 55 முதல் 60 வயது வரை இருக்கலாம். சமூக வலைதளங்களில் வெளியான ஆபாச வீடியோக்களில் அந்த பெண்ணின் வீடியோவும் ஒன்றும்.
தன்னை விட்டுவிடும்படி அந்த பெண் கூறி இருக்கிறார். ஆனால், அதை மீறி பிரஜ்வல் ரேவண்ணா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். இதையடுத்து, அந்த பெண்ணை மீட்க காவல்துறை தொடர் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற சதீஸ் பாபுவை கர்நாடக காவல்துறை கைது செய்தது. அவருக்கு மைசூரு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது.