மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து இனக்கலவரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த இனக்கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


மணிப்பூர் இனக்கலவரத்தை அடக்க முடியாமல் திணறும் மத்திய அரசு:


மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.


மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லி டால்கடோரா மைதானத்தில் காங்கிரஸ் மகளிரணி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கட்சியின் பெண் தலைவர்கள் கடுமையாக உழைத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவார்கள்" என்றார்.


தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை பற்றி பேசிய அவர், "ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல முடியும் என்றால், பிரதமர் ஏன் செல்ல முடியாது? அங்குள்ள பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பு அளித்துள்ளது? அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். ஆனால், பாஜகவோ மற்ற மாநிலங்களில் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


"இந்தப் போராட்டம் குடிமக்களுக்கானது"


2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான திட்டங்கள் மற்றும் உத்திகள் குறித்து எங்கள் கட்சியின் மகளிர் குழுவினர் விவாதிப்பார்கள். அடுத்த ஆண்டு பாஜக அரசை அவர்கள் அகற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மணிப்பூரில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து மௌனம் காத்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னரே, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.


நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. மணிப்பூரில் நடக்கும் கொடுமைகள் குறித்துப் பேசுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த பின்னரே அவர் பேசினார். மணிப்பூரில் எத்தனையோ உயிர்கள் பலியாகின. பல வீடுகள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இன்னும் பிரதமர் இது பற்றி எதுவும் பேசவில்லை.


அனைத்து கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் நோக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டம் குடிமக்களுக்கானது. இது எங்களின் தனிப்பட்ட சண்டை அல்ல. 70 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பிரதமர் மோடி கேட்கும்போது, ​​மொரார்ஜி தேசாய் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 


கடந்த 70 ஆண்டுகளில் நிர்வாகத்தை வழிநடத்தி சென்றோம். கடந்த 70 ஆண்டுகளில் நாம் அனைவரும் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தோம்" என்றார்.