ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உதவ கட்சி கடந்து அனைவரும் முன் வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று இரவு, ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த விபத்தில் மூன்று ரயில்கள் சிக்கியதில் குறைந்தபட்சம் 261 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


விபத்து நடந்தது எப்படி..?


நேற்று இரவு 7 மணி அளவில் யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் இருந்த தண்டவாளத்தில் ஏறியது. அப்போது, எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது தடம் புரண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மோதியது.


இதையடுத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள், மேலும் சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக மாறியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


விபத்துக்கு யார் பொறுப்பு..?


டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், 2013 முதல் 2014 வரையில், ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்த மல்லிகார்ஜுன கார்கே ரயில் விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடு கடந்து உதவ முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


நமது சிறந்த பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இதற்கு யார் பொறுப்பு என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இன்றைக்கு அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


"ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதற்கு ஆழ்ந்த வருத்தம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.


இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.