கிட்டத்தட்ட 22 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000க்கும் மேற்பட்டோர் ரகசிய வாக்குச்சீட்டு முறைப்படி புதிய தலைவரை தேர்வு செய்வார்கள். உள்கட்சி தேர்தலின் மூலம் இந்த மாநில நிர்வாகிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட யாத்திரிகர்கள் வாக்களிப்பதற்காக சிறப்பு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் தேர்தலில் போட்டியிடும் கார்கே மற்றும் தரூர் ஆகியோர் அவர்களின் சொந்த மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் வாக்களித்துள்ளனர்.
"அனைத்து மாநில நிர்வாகிகளும் அந்தந்த வாக்குச் சாவடிகளில் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு 'டிக்' அடையாளத்துடன் வாக்களிப்பார்கள். சுமூகமான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்திருந்தார்.
வாக்குப்பதிவு முடிந்ததும், சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் செவ்வாய்கிழமை நாளை கொண்டு செல்லப்பட்டு, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் உள்ள கண்ட்ரோல் அறையில் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் அனைத்து மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாக்குச் சீட்டுகள் கலக்கப்பட்டு பின்னரே, வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தலைவர் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள், வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமையுடன் இருப்பார்கள் என கார்கேவும், தரூரும் திரும்ப திரும்ப சொன்ன போதிலும், கார்கேதான் காந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவர் என்பது கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்டு கார்கே சென்றபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக, மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கு சசி தரூர் சென்றபோது, ஒன்று இரண்டு பேரை தவிர வேறு எந்த நிர்வாகியும் அவரை பார்ப்பதற்காக செல்லவில்லை.
தன்னை அணுகப்படும் முறையில் வேறுபாடு காட்டப்படுவதாகவும் ஒரு சார்புடன் நடந்து கொள்வதாகவும் சமமற்ற முறையில் போட்டி நடைபெறுவதாக சசி தரூர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருமனதாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1937, 1950, 1997 மற்றும் 2000 ஆண்டுகளில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்ததால் தேர்தல் நடத்தப்பட்டது.