பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது.


பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார். மத்திய பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அங்கு, ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


"ஏழ்மை என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை"


இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சோனி நகரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "புத்தகத்தை படித்து ஏழ்மை என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என தெரிவித்தார். 5 கிலோ இலவச அரிசி வழங்கும் ரேசன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவிப்பு வெளிட்டிருந்தார்.


நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருவது இதன் மூலம் தெரிய வருகிறது என்றும் சமத்துவமின்மை அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.


தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கு பதிலடி அளித்த பிரதமர் மோடி, "நான் வறுமையில் இருந்து வெளியே வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடிகிறது. எனவே, உங்களின் மகனாகவும் உங்களின் சகோதரராகவும் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளேன். 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' வரும் டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ள போதிலும், மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷனை நீட்டிக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 


"காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது"


இது பாஜக குடும்பம். ஒவ்வொரு ஏழையும் பிற்படுத்தப்பட்டவரும் தலித்தும் பழங்குடியினரும் பாஜக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் குடும்ப உறுப்பினர்கள். காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது. வளர்ச்சியை நோக்கி காங்கிரஸ் உழைப்பதில்லை. அது, ஏழை மக்களின் பைகளை காலி செய்கிறது.


2014ஆம் ஆண்டுக்கு முன்பு, காங்கிரஸ், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தது. இப்போது, பாஜக ஆட்சியில் ஊழல் நடைபெறுவது இல்லை. ஏழைகளின் பெயரில் சேமிக்கப்படும் பணம் அவர்களின் ரேஷன் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்.


காங்கிரசுக்கு சொந்த குடும்பத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. காங்கிரஸ் பதவி ஏற்கும் போது, அரசின் திட்டங்கள், சாலைகள், தெருக்கள் என எல்லாவற்றுக்கும் அந்தக் குடும்பத்தின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. மத்திய பிரதேச தேர்தல் அறிக்கையில் அந்தக் குடும்பம் மட்டுமே தெரிகிறது" என்றார்.


இதையும் படிக்க: ABP C Voter Opinion Poll: மிசோரத்தில் சர்ப்ரைஸ் கொடுக்குமா காங்கிரஸ்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?