Sam Pitroda Viral Speech: இந்தியர்கள் குறித்து வெளிநாட்டவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.
சாம் பிட்ரோடா சொன்னது என்ன?:
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா பதவி வகித்திருந்தார். இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது பேசியதாவது இந்தியாவின் கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும், தெற்கில் ஆப்பிரிக்கர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் அங்கும் இங்கும் சில சண்டைகளை தவிர, மக்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல்தான் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தது.
இந்திய மக்கள் பல்வேறு மொழிகள், மதங்கள், உணவு, பழக்கவழக்கங்களை மதிக்கிறார்கள், அதுதான் நான் நம்பும் இந்தியா, இங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று பிட்ரோடா கூறினார்.
பாஜக விமர்சனம்:
சாம் பிட்ரோடா இந்தியா நாட்டைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையாக குற்றம் சுமத்தியது. பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் தெரிவிக்கையில், இந்தியாவைப் பற்றி சாம் பிட்ரோடா எப்படி புரிந்து கொண்டுள்ளார் என்பது மீண்டும் தெளிவாகிறது. அவருக்கு இந்திய நாட்டைப் பற்றி புரியவில்லை. இவர் ராகுல் காந்தியின் ஆலோசகர். ராகுல் காந்தி ஏன் இப்படி பேசுகிறார் என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது தோல்வியின் விரக்தி. அவர்களுக்கு இந்தியாவையோ அல்லது அதன் பாரம்பரியத்தையோ பற்றி புரியவில்லை என்று பிரசாத் கூறியிருந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பாஜக ஆதர்வாளர்கள் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியர்கள் எப்படி வெளிநாட்டவரோடு தொடர்பு படுத்தலாம் என விமர்சனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் விலகல்:
பிட்ரோடாவின் கூறிய விதத்தில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூற வந்த முறையானது ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, அவர் கூறிய கருத்திலிருந்து விலகியே இருக்கிறது ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
ராஜினாமா:
இந்நிலையில், இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.