கர்நாடக பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 14 வரை சிறை:
பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை வரும் 14 தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க ரேவண்ணா அழைத்துச் செல்லப்பட்டார்.
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரேவண்ணா, கடந்த மே 4 ஆம் தேதி ஆட்கடத்தல் வழக்கில் எஸ்ஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வழக்கு:
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக எடுத்ததாக புகார் எழுந்தது.
பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றிருப்பது பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க செய்தது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்தது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மட்டும் இன்றி அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரேவண்ணா, இன்று நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் வகையில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.