அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


பிரதமர் மோடி குறித்தும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் செஷன் நீதிமன்றம். இந்த தீர்ப்பு, ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


தீர்ப்பு குறித்து காங்கிரஸ் விளக்கம்:


இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி, அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது அனைவரின் கேள்வியாக உள்ள நிலையில், தீர்ப்பு குறித்து காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.


அதில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. ஒரு தவறான தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்துவோம். சூரத் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் இந்த இரண்டு தீர்ப்புகளிலும் காணப்படும் சட்டப் பிழைகளை சரி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். 


இந்தத் தீர்ப்பில் சட்டப்பூர்வமான நிலையான பகுத்தறிவு இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பாஜக தனது குறுகிய மற்றும் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக OBC சமூகத்தை தவறாகப் பயன்படுத்துவதை இந்தியா மக்கள் பார்த்து வருகின்றனர். பாஜக நினைப்பது போல் ராகுல் காந்தியின் குரலை அடக்க முடியாது. ராகுல் காந்திக்கு எதிராக லட்சக்கணக்கான ட்ரோலர்கள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளனர்.


தீர்ப்பில் தெரிவித்தது என்ன?


ராகுல் காந்தி இந்த விஷயத்தில் அவதூறாக எதுவும் பேசவில்லை. மக்களுக்காக தொடர்ந்து பேசுவார். சூரத் நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்திக்கு ஆதரவான சில அம்சங்கள் உள்ளன" என்றார்.


அவதூறு வழக்கில் தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், தண்டனைக்கு தடை கோரி சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தார். அதில், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதன் காரணமாக விசாரணை நீதிமன்றம் தன்னை கடுமையாக நடத்தியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.


கடந்த வாரம் அந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி.மொகேரா,  தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இச்சூழலில், ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒரு வேளை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இன்று தடை விதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது ரத்து செய்யப்பட்டு இருந்தாலோ, மீண்டும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருப்பார்.