காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் நாட்டுக் கொடியைப் போர்த்திய ஆணும், ரஷ்யக் கொடியைப் போர்த்திய பெண்ணும் தழுவிக் கொள்ளும் படத்தைப் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, போர் துவங்கி இரண்டு நாள்கள் ஆகியுள்ள நிலையில், சமாதானத்தைக் குறிக்கும் விதமாக இந்தப் படத்தைப் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.
`கவலை தரும் படம்.. உக்ரைன் கொடி போர்த்திய ஆண், ரஷ்யக் கொடி போர்த்திய பெண்ணைத் தழுவுகிறார்.. அன்பு, அமைதி ஆகியவை போரை வெல்லட்டும்’ எனவும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. உலகம் முழுவதும் ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போரை நிறுத்துமாறு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ, ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுமார் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடத்திய சுமார் 700 பேர ரஷ்ய காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், மத்திய மாஸ்கோவில் உள்ள புஷ்கின் சதுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேரும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் சுமார் ஆயிரம் பேரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாலஸ்தீனைச் சேர்ந்த கவிஞர் மஹ்மூத் தர்விஷ் எழுதிய கவிதை ஒன்றைப் பகிர்ந்து போருக்கு எதிரான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
`போர்கள் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். வீர மரணம்டைந்த தன் மகனுக்காக மூதாட்டி காத்துக் கொண்டிருப்பாள். தன் ஆருயிர் கணவனுக்காக பெண் காத்துக் கொண்டிருப்பாள். தங்கள் நாயகனான அப்பாவுக்காக அந்தக் குழந்தைகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நமது தாய்நாட்டை யார் விற்றார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதற்கான விலையை யார் கொடுத்தார்கள் என்பதை நான் பார்த்தேன்’ என்று அந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.