டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மலர்தூவி மரியாதை:
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்ததோடு, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராகுல், சோனியா மரியாதை:
இதனிடையே, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபல் உள்ளிட்டோரும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக எம்.பிக்களான திருச்சி சிவா, கதிர் ஆனந்த மற்றும் காங்கிரஸ் எம்.பி ஆன ஜோதிமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
திமுக கூட்டணி:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில், காங்கிரஸ் மற்றும் திமுக தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கலாம் என எதிர்க்கட்சிகள் பல முயன்றாலும், காங்கிரஸ் இல்லாமல் அமைக்கப்படும் கூட்டணி பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்தது. அதைதொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக தான், 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா எனும் பிரமாண்ட கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் மும்பையில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால் தான், திமுக அலுவலகத்திற்கே வந்து கருணாநிதி புகைப்படத்திற்கு ராகுல் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
திமுக அமைதிப்பேரணி:
இதனிடையே, கருணாந்தியின் நினைவுநாளில் ஆண்டுதோறும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடப்பது வழக்கமாகும். அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகே புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.