ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை,  இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சுட்டுக் கொன்றது. துப்பாக்கிச் சண்டையின் போது ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.






ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இருக்கும் திக்வார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல் கிடைத்த நிலையில், ராணுவத்தினர் விரைந்து செயல்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பதுங்குயிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒரு பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திக்வார் பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


நேற்று இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இந்திய இராணுவமும் குப்வாரா காவல்துறையும் தங்தார் செக்டரில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். தங்தார் செக்டாரில் உள்ள அம்ரோஹி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்திய ராணுவமும் குப்வாரா காவல்துறையும் இணைந்து ஊடுருவல் முயற்சிகள் குறித்த தகவலின் அடிப்படையில் தக்கேன் - அம்ரோஹி பகுதியில் கூட்டு தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். குப்வாரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வழியாக ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்” தெரிவித்தார்.  


ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் ஒரு பெரிய தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற 2-வது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.