மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:


''தமிழ்நாட்டில் கல்விக்காக 12 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கி உள்ளது. அருகில் உள்ள பூட்டானில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.


கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, கல்வி ஏதோ தங்களுக்கு மட்டுமே உரிமையான ஒன்று என்பதுபோல நடந்து கொள்கிறது. கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய நிதியில் 60 சதவீதம் மத்திய அரசு தர வேண்டும். 40 சதவீதத்தை மாநில அரசு தர வேண்டும். ஆனால் கல்விக்காகத் தமிழ்நாடு அரசு 50 சதவீதத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.


கல்விப் பொதுப் பட்டியலில் இருந்தாலும் எங்களிடமிருந்து வரியை வாங்கிக் கொண்டு, நிதியை தர மறுக்கிறீர்கள். இது மணிமேகலை (தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று) அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு பிச்சை பாத்திரத்தை வழங்கியபோல் இருக்கிறது.


இந்தியைத் திணிக்கிறீர்கள்


தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 15-ல் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதையும் நாங்கள் கெஞ்சி, கோரிக்கை வைத்தால்தான் தமிழ் ஆசிரியர் இருந்தால் தமிழ் கற்பிக்கப்படும் என்கிறீர்கள். சொல்லப்போனால், ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கூட வாங்க முடியவில்லை, அந்த அளவுக்கு இந்தியைத் திணித்து வருகிறீர்கள். இந்தியை மட்டுமா திணிக்கிறீர்கள்? சமஸ்கிருதத்தையும் சேர்த்துத் திணிக்கிறீர்கள். நீங்கள் எங்களின் மொழிக் கொள்கையை விமர்சிக்கிறீர்களா?


குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகள் பற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது அவரே மாநில உரிமைகளைப் பறிக்கிறார்.


குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் திட்டத்துக்குக் கூட போதிய நிதி இல்லை


ஒரு மாணவர் இருந்தால்கூட பள்ளியை மூடாமல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் மாணவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பள்ளியை மூடிவிட்டு, பல கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிகளுக்குக் குழந்தைகளைச் செல்ல வைக்கிறீர்கள். பிஎம் போஷன் என்னும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் திட்டத்துக்குக் கூட போதிய நிதி வழங்க மறுக்கிறீர்கள்.


உரிமைகளில் தலையிட ஒன்றிய அரசாங்கம் யார்?


பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால் மத்திய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு 500 கோடி நிதியை வழங்க மறுக்கிறது. எங்களின் கல்விக் கொள்கையில், மக்களின் நம்பிக்கையில், மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மக்கள் அரசின் உரிமைகளில் தலையிடுவதற்கு ஒன்றிய அரசாங்கம் யார்?’’


இவ்வாறு கனிமொழி எம்.பி. மக்களவையில் பேசினார்.