சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
சூடுபிடித்த சத்தீஸ்கர் தேர்தல்:
2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை சேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சத்தீஸ்கரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை அதிக பெண் வேட்பாளர்களை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிதிக இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையில் பாஜக சட்டம் இயற்றியுள்ளது.
பெண்கள் மூலம் பாஜகவுக்கு செக்:
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை, தேர்தல் நாடகம் என காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில், பாஜகவுக்கு செக் வைக்கும் நோக்கில் சத்தீஸ்கரில் அதிக பெண் வேட்பாளர்களை களம் இறக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
90 உறுப்பினர்கள் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், 13 பேர் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவர். இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் டி.எஸ்.சிங் டியோ கூறுகையில், "சத்தீஸ்கரில் உள்ள 11 மக்களவை தொகுதிகளில் 2 பெண் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியால் களம் இறக்க முடியும்.
அதற்கு, இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்படும் என்பதல்ல. நல்ல வேட்பாளர்கள் என்றால், இரண்டு பெண்களுக்கு மேல் வாய்ப்பளிக்கப்படும்" என்றார். அதிக பெண் வேட்பாளர்களை களம் இறக்கலாம் என்ற யோசனையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர் குமரி செல்ஜா முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
மம்தா பார்முலாவை கையில் எடுத்த காங்கிரஸ்:
இருப்பினும், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது கட்சிக்கு சிக்கலாக கூட மாற வாய்ப்பிருக்கிறது. அதிக பெண்களுக்கு வாய்ப்பளித்தால் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். எனவே, இது கட்சியில் அதிருப்தியை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட 2,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து சிட்டிங் எம்.எல்.ஏக்களும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். ஆனால், வேட்பாளரின் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிக பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை திரிணாமுல் காங்கிரஸ் ஃபார்முலாவாகவே பின்பற்றி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் நடந்த மக்களவை தேர்தலில், மொத்தமுள்ள 42 இடங்களில் 17 இடங்களில் பெண்களை களம் இறக்கியது. அதேபோல, 2021 சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 50 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.