காங்கிரஸ் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ’பாரத் ஜோடா யாத்திரை’ எனும் பேரில் பாதயாத்திரை செல்கிறார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் காந்தியை கன்னியாகுமரியில் சந்தித்து வாழ்த்தியதோடு, அவரிடம் தேசியக்கொடியை வழங்கி யாத்திரையைத் தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த பாதயாத்திரையின் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியவை பின்வருமாறு:
இந்தியாவைப் பிரித்து பிரிட்டிஷ் செய்ததைப் போன்று, நம்மில் பிரிவினை ஏற்படுத்தி நாட்டின் வளங்களை திருடுவதே பாஜகவின் எண்ணம். தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் போதாது, தேசியக் கொடி உள்ளடக்கிய கருத்துகளையும் பாதுகாக்க வேண்டும்.
மூவர்ணக் கொடி ஒவ்வொரு இந்தியரின் அடையாளம், அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக்கொடி உத்தரவாதம் செய்கிறது. ஆனால் இப்போது தேசியக் கொடியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்ல, நாட்டின் லட்சக்கணக்கான இந்தியர்களும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வின் அவசியத்தை உணர்கிறார்கள். இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கை தேவை.
நமது நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு வந்துள்ளதும், இந்த அழகான இடத்தில் இருந்து இந்த பயணத்தைத் தொடங்குவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாட்டு வருவது எப்போதும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று மாலை இந்த ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள பேரணி, 150 நாள்களுக்கு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.