கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி இன்று தொங்கி வைத்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று மாலை தொடங்கப்பட்டுள்ள பேரணி, 150 நாள்களுக்கு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.




பயணத்தின் முக்கிய தகவல்களை கீழே காணலாம்: 


மே 21, 1991ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று இன்றைய நாளைத் தொடங்கினார் ராகுல் காந்தி.


 






தந்தையின் நினைவிடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் ட்விட்டரில், "வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியலால் நான் என் தந்தையை இழந்தேன். என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்" என பதிவிட்டுள்ளார்.


பாஜக ஆட்சியின் கீழ் சமூகம் பிளவுப்பட்டுள்ளதாகவும் அதிகார குவியல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம், நாட்டை ஒருங்கிணைக்க தனக்கு ஆற்றல் மிக்க சக்தியை  தந்துள்ளதாக கூறியிருந்தார்.


2024ஆம் ஆண்டு, பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இந்த நடைப்பயணத்தின் மூலம் மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அரசியலை மறுத்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நாட்டை ஒன்றிணைப்பதற்காகவே யாத்திரையை நடத்த திட்டுமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


மாலையில் கன்னியாகுமரியில் உள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி யாத்திரை துவக்கி வைத்தார். கடந்த நூற்றாண்டில் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நீண்ட நடைபயணம் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.




3,500 கிலோமீட்டர் தூர யாத்திரை பேரணியுடன் தொடங்கப்பட்டுள்ளது. பாத யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கும். ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை இரண்டு தொகுதிகளாக நடைபயணம் மேற்கொள்வார்கள். அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இதில் உள்ளடக்கும்.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை முடியும் வரை காந்தி நடந்து செல்வார். நடைபயணம் முழுவதும் கண்டைனரிலேயே ராகுல் காந்தி தங்குகிறார். அதில், ஒரு படுக்கை, கழிப்பறை மற்றும் ஒரு ஏர் கண்டிஷனர் இருக்கிறது.