காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாளத்தில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்துகொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


2024ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாநிலக் கட்சிகள் வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி வருகின்றன. பாஜகவுக்கு மாற்று கட்சியாகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்க்க எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கியிருந்தார். ஆனால், பாஜகவோ தேர்தலுக்கான வேலைகளை ஏற்கனவேத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ராகுல்காந்திக்கு எதிரான அஸ்திரத்தை ஏவத்தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாகதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது ராகுல்காந்தியின் வீடியோ.


பாஜக ஐடி விங்கின் தலைவரான அமித் மால்வியா ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு காங்கிரஸ் கட்சி வெடிக்கும் நிலையில் இருக்கும்போது ராகுல்காந்தி நைட் க்ளப்பில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் வண்ண விளக்குகள் ஒளிர, மதுவிருந்து நடக்கும் ஒரு க்ளப்பில் ராகுல்காந்தி ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






நேபாளத்தைச் சேர்ந்த பூபென் கன்வார் என்பவர் இரண்டு வீடியோக்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அதில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி எல்ஓடியில் (லார்ட் ஆஃப் த ட்ரிங்க்) இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். ஒரு வீடியோவில் மதுபாட்டில்கள் முன்பு நின்றுகொண்டிருக்கும் ராகுல்காந்தி செல்ஃபோனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது வீடியோவில், ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.



ராகுல் காந்தியின் ஊடக நண்பரான சும்னிமா உதாஸின் (Sumnima Udas ) திருமணவிழாவில் கலந்துகொள்ள நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றுள்ள ராகுல்காந்தி, பகவதிஸ்தானில் உள்ள பிரபல நைட்க்ளப்பான லார்ட் ஆஃப் த ட்ரிங்ஸிற்குச் சென்றுள்ளார். அங்கு தான் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.