கேரள மாநிலம் வயநாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, "குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லாமல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.


வயநாடு களத்தில் பிரியங்கா காந்தி:


இதனால் காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதி, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இன்றைய பிரச்சாரத்தில் பேசிய அவர், "நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லை.


"மீண்டும் மீண்டும் குரல் எழுப்புவேன்"


இங்கு பல விளையாட்டு அரங்குகள் உள்ளன. நீங்கள் கால்பந்தை விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால், உங்களுக்கு வசதிகள் போதுமானதாக இல்லை. அவை மேம்படுத்தப்பட வேண்டும். தங்கள் மாநிலத்திற்காக விளையாடுவதற்கும், நாட்டிற்காக விளையாடுவதற்கும் கடினமாக உழைக்கும் இந்த இளம் சிறுவர்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்" என்றார்.


 






பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் குரல் எழுப்புவேன். அவர்களில் பலருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்று நம்புகிறேன். யார், யாருக்கு வழங்கவில்லையோ அவர்களுக்கான நிதியை அரசு விடுவிக்க வேண்டும். எனவே, அதற்காகவும் போராடுவேன். இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் எழுப்புவேன்" என்றார்.