C-295 Aircraft: குஜாரத்தில் உள்ள டாடாவின் புதிய ஆலையை திறக்கும்போது, பிரதமர் மோடி உடன் ஸ்பெயின் பிரதமரும் இருந்தார். 


டாடா ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி


குஜராத்தின் வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். C-295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன. இதில், 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் மூலம் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன. மீதமுள்ள 40 விமானங்கள் வதோத்ராவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்திய ராணுவ விமானங்களை உற்பத்தி செய்யும் தனியார் துறையின் முதல் ஃபைனல் அசெம்ப்ளி லைன் (FAL) இதுவாகும்.


சி-295 விமான உற்பத்தி


வதோத்ராவில் அமைந்துள்ள டாடா ஆலையானது சி-295 விமானத்தின் தயாரிப்பில் இருந்து அசெம்பிளி, சோதனை மற்றும் தகுதி, வழங்குதல் மற்றும் பராமரித்தல் வரை முழுமையான பணிகளை மேற்கொள்கிறது. அதோடு, எதிர்காலத்தில் இந்த ஆலையில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்படும் என, திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகம் 56 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக ஸ்பெயினின் ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ நிறுவனத்துடன்,  ரூ. 21,935 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.






சி-295 விமானத்தின் முக்கியத்துவம்:


C -295 என்பது 5 முதல் 10 டன் எடைகளை  கையாளும் திறன் கொண்ட ஒரு போக்குவரத்து விமானமாகும். இது இந்திய விமானப்படையில் நீண்டகாலமாக உள்ள Avro-748 விமானங்களுக்கு மாற்றாக இடம்பெற உள்ளது. C-295 என்பது 71 வீரர்கள் அல்லது 50 பராட்ரூப்பர்களின் தந்திரோபாய போக்குவரத்திற்கும், தற்போதைய கனமான விமானங்களால் அணுக முடியாத இடங்களுக்கு தளவாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த விமானம் என்று அறியப்படுகிறது.


"வலுவான மற்றும் நம்பகமானதாக" நம்பப்படும் சி-295 விமானம், 11 மணிநேரம் வரை தொடர்ந்து பறப்பதற்கான திறனை கொண்டுள்ளது. அனைத்து வானிலை நிலைகளிலும் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபடுத்தலாம். பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட பாலைவனத்தில் தொடங்கி கடல் சூழல்கள் வரை போர்ப் பணிகளில் இந்த விமானத்தை ஈடுபடுத்தலாம்.


விரைவாக எதிர்வினை ஆற்றவும், துருப்புக்கள் மற்றும் சரக்குகளை பாரா-ட்ராப்பிங் மூலம் தரையிறக்கவும் சி -295  விமானத்தின் பின்புறத்தில் சாய்வு கதவு உள்ளது. பகுதியளவு தயாரிக்கப்பட்ட பரப்புகளில் இருந்து டேக்-ஆஃப்/லேண்ட் செய்வது இந்த விமானத்தின் மற்றொரு அம்சமாகும். ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அனைத்து 56 விமானங்களும் இந்திய DPSU-களான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு எலக்ட்ரானிக் வார்ஃபேர் தொகுப்புடன் இணையும்.