பிரதமர் மோடியின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் வடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் டாக்டரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ்.


காங்கிரஸ் மூத்த தலைவரின் பகிரங்க மிரட்டலால் பரபரப்பு:


சமீபத்தில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள உதித் ராஜ், "மோடி பக்தராக யார் இருந்தாலும் கொல்லப்படுவார்கள்" என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இது ட்விட்டரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கடமையை ஆற்றி, தங்களுக்கு பிடித்தமான தலைவரை தேர்வு செய்ததற்காக கொலை மிரட்டல் விடுத்துள்ள உதித் ராஜூக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள உதித் ராஜ், முன்னதாக பாஜகவில் இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வடமேற்கு டெல்லியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.


சமீப காலமாகவே, வெறுப்பை பரப்பும் விதமான பேச்சுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மக்களின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படுபவர்கள் மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.


மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பல்வேறு சமயங்களில் குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இம்மாதிரியாக வெறுப்பு பேச்சுகளில் ஈடுபடுவது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.


தொடர்ந்து அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு:


சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. நெறியாளரின் பங்கு இதில் மிக மிக முக்கியம் என கருத்து தெரிவித்திருந்தது. மேலும், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.


"பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த பேச்சுக்கள் கட்டுப்பாடற்று உள்ளன. வெறுப்புப் பேச்சு யாரோ செய்யும் தருணத்தில் தொடராமல் பார்த்துக் கொள்வது நெறியாளரின் கடமை. பத்திரிக்கை சுதந்திரம் முக்கியம். 


அமெரிக்காவைப் போல இங்கு சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால், எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சட்ட ஆணையம், வெறுப்பு பேச்சு தொடர்பாக குறிப்பிட்ட சட்டங்களை பரிந்துரைத்து 2017இல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், "வெறுக்கத்தக்க பேச்சு இந்தியாவில் எந்த சட்டத்திலும் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும், சில சட்டங்களில் உள்ள சட்ட விதிகள் பேச்சு சுதந்திரத்திற்கு விதிவிலக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சு வடிவங்களை தடை செய்கின்றன" என்று ஆணையம் குறிப்பிட்டது.