அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலின் செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.


பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 15 மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. 


மத்திய பிரதேச தேர்தல்:


இதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு தாவினார்கள். பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். 


இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவை தேர்தலில் களத்தில் இறக்கியுள்ளது பாஜக. அதேபோல, ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 136 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியிலை பாஜக வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியும் தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக ராமாயணம் தொடரில் அனுமனாக நடித்த விக்ரம் மஸ்டலை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ்.


ம.பி. முதலமைச்சருக்கு எதிராக ராமாயணம் நடிகர்:


கடந்த 2008ஆம் ஆண்டு, ஆனந்த் சாகர் இயக்கத்தில் தொலைக்காட்சியில் வெளியான ராமாயணம் தொடர், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. புத்னி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக நடிகர் விக்ரம் மஸ்டலை களமிறக்கி போட்டியை கடுமையாக்கியுள்ளது காங்கிரஸ்.


முன்னாள் முதலமைச்சரும், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவருமான கமல் நாத்தை அவரது சொந்த தொகுதியான சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியது. ராகிகாத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜெய்வர்தன் சிங்.


முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜய் லட்சுமி சாதோ, ரிசர்வ் தொகுதியான மகேஷ்வர் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ராவ் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜிது பட்வாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 39 பேரும், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 30 பேரும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த 22 பேரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 19 பெண்கள் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 65 பேர், 50 வயதுக்கும் குறைவானவர்கள்.