இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று பாஜக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கடந்த 20 ஆண்டுகளில், 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளன. நாம் விவாதிக்கும் பிரச்சனையின் பின்னணி இதுதான்.
நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அனுப்பப்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் எப்படி உருவானது என மக்களுக்கு தெரிய வேண்டும்.
இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. காங்கிரஸ், திமுக என இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல இந்த விஷயத்தை அணுகுகிறார்கள். இதனை மத்திய அரசு தீர்த்து வைக்கவேண்டிய சூழலில் இருந்தாலும், இந்த விவகாரம் இப்போதுதான் நடந்திருப்பதுபோலும், இவர்கள்தான் போராட்டம் நடத்துவதாகவும் பிம்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கும் ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் அதன் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டன.
ஆனால் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த சிறு தீவு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீண்ட காலம் இழுபறியில் இருக்கும் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு எட்ட வேண்டும் என நேரு கூறியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ”கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.