Modi Interview: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு கட்சிகளை பாஜக கூட்டணியில் இணைத்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்த அதிமுக கடந்தாண்டு வெளியேறியது. இதுகுறித்து பிரதமர் மோடி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், "ஜெயலலிதா ஒரு நல்ல நண்பர். அதன் பிறகு, குஜராத் முதலமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
2002 தேர்தலுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் மீது குற்றங்கள் சொன்னார்கள். அந்த சமயத்தில், முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்காக ஜெயலலிதா குஜராத்திற்கு வந்தார். என் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. அந்தளவுக்கு அவருடன் நல்ல நட்பு இருந்தது.
அதிமுக குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி:
இந்த விஷயத்தில் யாருக்காவது வருத்தம் ஏற்படும் என்றால் அது அதிமுகவினருக்குதான். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கின்ற பாவத்தை செய்பவர்கள்தான் வருத்தப்பட வேண்டும்" என்றார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு என்ற நிலை மட்டும்தான் இருக்கிறது. இப்படியிருக்க, திமுக எதிர்ப்பு மன நிலை கொண்ட வாக்காளராக ஒருவர் இருந்தால், அவர் ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்காமல் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த பிரதமர், "இந்த முறை பாஜகவும் பாஜக கூட்டணியும் வலுவாக உள்ளது.
சமூகத்தில் பல்வேறு சமூகங்களை இணைக்கின்ற, பல்வேறு பொருளாதார நிலையில் உள்ள சமூக குழுக்களை உள்ளடக்கியதாக உள்ளது பாஜக கூட்டணி. இது கிட்டத்தட்ட ஒரு மலர் செண்டு போல உள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மலரை போன்று உள்ளனர். இதை விரும்புபவர்கள் கூட நாம் விரும்புகிற மலர் உள்ளே இருக்கிறது என நேசிப்பார்கள். இதுதான் எங்களின் பலம்.
பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் எதிர்ப்பு வாக்குகள் அல்ல. நேர்மையான, நேர்மறையான வாக்குகள் ஆகும். இந்த முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் மக்கள் வாக்களிக்க உள்ளனர்" என்றார்.
இதையும் படிக்க: PM Modi: தமிழ்நாட்டில் பிடித்தது மொழியா? சாப்பாடா? மனம் திறந்த பிரதமர் மோடி!