Toll Gate Fee: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்யப்பட்டுள்ளது
சுங்கக் கட்டண உயர்வு ரத்து:
நள்ளிரவு முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தேர்தல் முடிந்ததும், வரும் ஜுன் மாதத்தில் புதிய சுங்கக் கட்டணங்கள் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டண விவரம்:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் என்பது வாகனங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 49 சுங்கச்சாவடிகளில் 29ல், நளிரவு 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அந்த உத்தரவு தற்போது ரத்தாகியுள்ளது.
தமிழ்நாடு சுங்கச்சாவடிகள்:
அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புத்தூர்,
பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக இருந்த நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்:
தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. மத்திய அரசின் விதிகளின்படி, 15 ஆண்டுகளைக் கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 49 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். ஆனால், அவை மூடப்படாமல் புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.