தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம். இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 13ஆம் தேதி, முடிவுகள் வெளியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 


கர்நாடக தேர்தல்:


நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


ஒரு மாநிலத்தில் பொதுத் தேர்தல் வருகிறது என்றால், பாஜக தான் வேட்பாளர்களை முதலில் அறிவித்து தேர்தல் களத்தினை எதிர்கொள்ளும். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 


இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், கர்நாடகாவை கைப்பற்ற இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


பண மழையில் நனைய வைத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்:


இந்நிலையில், இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், மக்களை பண மழையில் நனைய வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மாண்டியா மாவட்டம் பெவினஹள்ளியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிவகுமார், 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் மீது வீசி எரிந்துள்ளார்.


காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் சிவக்குமார், வொக்கலிகா சமூக மக்களின் கோட்டையாகக் கூறப்படும் மாண்டியாவில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கோட்டையாக கருதப்படும் மாண்டியா மாவட்டத்தை காங்கிரஸ் பக்கம் இழுக்க சிவகுமார் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார்.


கடந்த தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாண்டியா மாவட்டத்தில் ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தபோதிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 


ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த 14 மாதங்களிலேயே, ஆளும் கூட்டணியின் 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.


இதனை தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி பாஜக உயர் மட்ட தலைவர்கள் எடியூரப்பாவை கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.


 






இறுதியில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக, பசவராஜ் பொம்மைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இது, பாஜகவுக்கு எதிராக தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.