அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக/பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெற்றது.


இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள், மே 13ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.


கர்நாடக அரசியல்:


கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகளே களத்தில் உள்ளன. தற்போது கர்நாடகாவை ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ். பழைய மைசூரு பகுதியில் பலமான கட்சியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.


ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தபோதிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.




இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த 14 மாதங்களிலேயே, ஆளும் கூட்டணியின் 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.


இதனை தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி பாஜக உயர் மட்ட தலைவர்கள் எடியூரப்பாவை கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.


இறுதியில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக, பசவராஜ் பொம்மைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இது, பாஜகவுக்கு எதிராக தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உறுதியாகியுள்ளது.


கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?


ABP News - CVoter Team இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறியுள்ளது. அதன்படி, தற்போது ஆளும் பாஜகவின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 50.5 சதவிகித்தினர் தெரிவித்துள்ளனர். 


அதேபோல, கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக 27.7 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். சுமாராக இருப்பதாக 21.8 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். 


பொறுப்பு துறப்பு: இந்த கருத்துக்கணிப்பு, சி வோட்டர் நிறுவனத்தால் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. கர்நாடக முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 24,759 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில், ±3 to ±5% வரை மாற்றம் இருக்க வாய்ப்பு.