காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.


இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.


ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், இயற்பியலாளரும் முன்னாள் ஐஐடி டெல்லி பேராசிரியருமான விபின் குமார் திரிபாதி, எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.


தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது. 


வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்திய ஒற்றுமை நடைபயணம்:


நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்களுக்கு நடந்த இந்திய ஒற்றுமை பயணம் கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 


இந்த ஒற்றுமை பயணத்தால் மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லநுர்கள் கருதுகின்றனர்.


இந்த நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு நடைபயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. தெற்கில் இருந்து வடக்கு வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் போல கிழக்கில் இருந்து மேற்கிற்கு நடைபயணம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டது.


பாரத் ஜோடோ யாத்ரா 2.0:


இந்நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வரை புதிய நடைபயணம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் நடைபயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி யாத்திரையை நடத்த பரிசீலித்து வருகிறோம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தால் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகம் கிடைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் இது தேவை என்று நானும் நினைக்கிறேன்.


ஆனால், கிழக்கிலிருந்து மேற்கு செல்லும் யாத்திரையின் வடிவம் தெற்கிலிருந்து வடக்கு சென்ற பாரத் ஜோடோ யாத்திரையின் வடிவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.


அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து குஜராத் வரை:


அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட்டில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய யாத்திரை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்காக திரட்டப்பட்ட அத்தகைய விரிவான உள்கட்டமைப்பு இல்லாதிருக்கலாம். குறைவான யாத்திரிகர்கள் மட்டும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.


ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் காரணமாக ஜூன் மாதத்திற்கு முன் அல்லது நவம்பருக்கு முன் யாத்திரை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.