நாட்டின் முன்னணி கல்வி நிலைங்களில் ஒன்றாக இருப்பது ஐஐடி. இங்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. 


ஐஐடியில் சாதிய பாகுபாடு:


சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடையே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்றார்.


தலித், பழங்குடியின மாணவர்களுக்காக கொதித்தெழுந்த இந்திய தலைமை நீதிபதி:


நேற்று, ஹைதராபாத்தில் NALSAR சட்ட பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய டி.ஒய். சந்திரசூட், "பேராசிரியர் சுக்தேவ் தோரட், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் தலித்கள் மற்றும் பழங்குடியினர் என்றும், அது நாம் கேள்வி கேட்க வேண்டிய ஒரு மாதிரியைக் உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 


75 ஆண்டுகளில், நாம் சிறந்த நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால், அதற்கும் மேலாக நாம் அனுதாபம் உள்ள அமைப்புகளை உருவாக்க வேண்டும். நான் இதைப் பற்றி பேசுகிறேன். ஏனென்றால், பாகுபாடு பிரச்சினை நேரடியாக அனுதாபத்துடன் தொடர்புடையது" என்றார்.


அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான Black Lives Matter இயக்கம் எழுச்சி பெற்றபோது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். இதை குறிப்பிட்டு பேசிய சந்திரசூட், "சமூக உண்மைகளிலிருந்து நீதிபதிகள் வெட்கப்பட்டு ஓட முடியாது" என்றார்.


நீதிபதிகள் வெட்கப்பட்டு ஓட கூடாது:


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நீதிபதிகள் சமூக உண்மைகளிலிருந்து வெட்கப்பட முடியாது. நீதித்துறை உரையாடல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் பொதுவானது. ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்குப் பிறகு Black Lives Matter இயக்கம் தோன்றியபோது, ​​அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர் .


கறுப்பின மக்களின் மோசமான வாழ்நிலை குறித்து அதில் பேசப்பட்டிருந்தது. கறுப்பின மக்கள் கல்வி கற்பதற்கு சிவில் உரிமை வழக்கறிஞர்கள் என்ன வேலை செய்தார்கள் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள் என ஹார்வர்ட் சட்ட பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் உள்ள நீதிபதிகள் நீதிமன்ற அறைக்கு உள்ளேயும் வெளியேயும் சமூகத்துடன் உரையாடுகிறார்கள்.


நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளைத் தவிர, நமது சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு கட்டமைப்பு சிக்கல்கள் மீது கவனம் செலுத்த முயற்சித்து வருகிறேன்" என்றார்.


ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பாகுபாடு குறித்து பேசிய அவர், "நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கப்படுவதை நிறுத்துவதே இதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாகும்.


இது சாதி அடிப்படையிலான பிரிவினைக்கு வழிவகுக்கும். நுழைவு மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதிகள் ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து தொடங்கலாம்.


சமூகப் பிரிவுகளுடன் சேர்த்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை வெளியிடுவது, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் மதிப்பெண் கேட்பது, அவர்களின் ஆங்கிலப் புலமையைக் கேலி செய்வது, திறமையற்றவர்கள் என்று முத்திரை குத்துவது போன்ற நடைமுறைகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.