உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த ஒரு மாதமாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, ``ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்தது.
இந்தப்போருக்காக உக்ரைன் மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகிறது. உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அதே போல் ரஷ்யாவும் உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகள், வான்வழிப் பரப்பை பயன்படுத்த தடை, எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் என ரஷ்யா அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன. அந்த குறிப்பிட்ட தயாரிப்புகளும் விற்பனைகளும் ரஷ்யாவில் நிறுத்தப்படுகின்றனர்.
Reckitt நிறுவனம்..
ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல நிறுவனங்களில் வரிசையில் தற்போது அடிபடும் பெயர் Reckitt. மருந்து தயாரிப்பு நிறுவனமான Reckitt விரைவில் ரஷ்யாவில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியானது. இதனால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பிரபல ஆணுறையான durex இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். Reckitt வெளியேறிவிட்டால் ஆணுறைக்கு என்ன செய்வது என அச்சத்துக்கு ஆளான ரஷ்ய மக்கள் அவசரம் அவசரமாக கடைகளுக்கும், மெடிக்கல்ஸுக்கும் சென்று ஆணுறைகளை வாங்கி வீட்டில் குவித்துள்ளனர். இதனால் சர்ரென ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த வருட மார்ச் மாத ஆணுறை விற்பனையை இந்த வருட மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் சுமார் 170% விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியிடபட்ட செய்தியின்படி, சூப்பர் மார்கெட்டுகளில் 30% ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் 9 வாரங்களில் ரஷ்யாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 12, 18 மற்றும் 30 துண்டுகள் கொண்ட தொகுப்புகளுக்கு அதிக தேவை இருப்பதாக விற்பனை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், தாய்லாந்து, இந்தியா, தென் கொரியா மற்றும் சீனா போன்ற மிகப்பெரிய உற்பத்தி நாடுகள் ரஷ்யாவிற்கு பொருட்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்