"நீரின்றி அமையாது உலகு “ என்ற வள்ளுவனின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது. குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி , இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து , தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அதிகரித்து வரும் தொழிற்ச்சாலைகள் , இயற்கை வளங்களை சுரண்டல் , தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் முன் கூட்டியே மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். இன்று மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று தண்ணீர் தினம் ம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இது நன்னீர் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க வளத்தின் நிலையான மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை முன்வைக்க சில தீம்கள் கையாளப்படும். அந்த வகையில் நேற்று செனகலின் டாக்கரில் 9வது உலக நீர் மன்றத்தின் தொடக்க அமர்வில் IGRAC (nternational Groundwater Resources Assessment Centre) தனது கருப்பொருளான நிலத்தடி நீர் - Making The Invisible Visible என்பது முன்மொழியப்பட்டுள்ளது.