குஜராத்தி நடன வடிவமான கர்பா நடனத்தை ஆடும் ஜோடி இடம்பெறும் ஆணுறை விளம்பரம் எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்தவில்லை என்று மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
விளம்பரம் செய்த மருந்தாளுனர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி சத்யேந்திர குமார் சிங் இந்த வழக்கை விசாரணை செய்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 505 மற்றும் 295A (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய அவர் கோரியிருந்தார்.
இந்த விளம்பரம் இந்து சமூகத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார்தாரர் கூறியிருந்தார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் டிசம்பர் 19 அன்று முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்தது. ஆனால் விரிவான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதி சத்யேந்திர குமார் சிங் தனது தீர்ப்பில், இந்து சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மருந்தாளுநர் செயல்படவில்லை, அதற்கான ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார். மேலும் அவர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அடையாளத்தை மறைக்காமல் தனது மொபைல் எண்ணிலிருந்து இந்த பதிவை பதிவிட்டிருப்பதாலும், தனது நிறுவனத்தின் தயாரிப்பை விளம்பரப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டார்.
இதே போன்ற சம்பவம் 2018 ஆம் ஆண்டு அரங்கேறியது. மகேந்திர திரிபாதி என்ற மருந்தாளர், தம்பதிகளுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் கர்ப்ப பரிசோதனை கருவிகளுக்கான விளம்பரத்தை வாட்ஸ்அப் குழு மற்றும் பேஸ்புக்கில் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த விளம்பரத்தில் கூட ஒரு ஜோடி கார்பா நடனம் ஆடுவது போல் இடம்பெற்றிருந்தது.
முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில், திரிபாதி ஒரு இந்துவாக இருப்பதால், சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று வாதிட்டதாக பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. கர்பா விளையாடும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தான் இந்த விளம்பரத்தை போட்டதாக திரிபாதி கூறினார்.