பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள டெல்லி ஜி20 உச்சி மாநாடு:


கடந்த 1997-98 ஆண்டுகளில் ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு 1999இல் ஜி20 அமைப்பு நிறுவப்பட்டது. தொழில்மயமாக்கப்பட்ட, மிக முக்கிய வளரும் பொருளாதாரங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் சர்வதேச பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மை பற்றி விவாதிக்கும் முறைசாரா மன்றமாகத்தான் தொடக்கத்தில் ஜி20 அமைப்பு இருந்தது.


கடந்த 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டு, உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத் தலைவர்கள் அங்கம் நிலைக்கு ஜி20 அமைப்பு மேம்படுத்தப்பட்டது. உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உருவெடுத்தது. 


இந்த ஆண்டு, இதற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. 


உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின் முக்கியத்துவம், மாநாடு எதில் கவனம் செலுத்த உள்ளது? உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு டெல்லி ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளருமான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பதில் அளித்துள்ளார்.


ABP LIVEக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை இந்த தொகுப்பில் காணலாம்.


"நம் நாட்டில் ஜி20 (உச்சிமாநாடு) மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் G20 அமைப்புக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. ஆனால், இது கடினமான காலம். முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய சவால்களை நாம் எதிர்கொண்டு வரும் நேரத்தில், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. 


"மனிதனை மையப்படுத்திய வளர்ச்சி மாடல்"


எங்கள் சொந்த அனுபவங்கள், எங்கள் சொந்த சாதனைகளைக் கருத்தில் கொண்டு, அந்த சவால்களுக்கு G20 மூலம் தீர்வுகளை வழங்குவதற்கு பல வழிகளில் நாங்கள் பங்களித்துள்ளோம். இந்தியாவில் பின்பற்றப்படும் "மனிதனை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியை" இந்தியா உலகிற்கு முன்வைத்து, பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதைச் செயல்படுத்தும்.


மனிதனை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்காகப் பாடுபடுவோம். உலகளாவிய பொது நலனுக்காகப் பாடுபடுவோம் என்று ஜி20 மூலம் உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தியா, அதன் சொந்த அனுபவங்கள் மூலம், இதை உலக அளவில் எங்கள் G20 கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.


பல துருவ உலகில் இந்தியா தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, உலகம் பல புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், வெற்றிகரமான தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்த ஜி20 உறுப்பு நாடுகளை ஒன்றிணைக்க முடிந்தது.


"வடக்குக்கும் தெற்குக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான பாலம்"


G20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் நாட்டுக்கு, மற்ற உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து, உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜி20 அமைப்பின் திட்டத்தை வகுக்கும் பொறுப்பு உள்ளது. நாம் தனித்துவமான நிலையில் இருக்கிறோம். 


நம்மை ஜி7 அமைப்பின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. நாம் குவாட் அமைப்பின் உறுப்பினராக உள்ளோம். நாங்கள் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளோம். நாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ளோம். அந்த சித்தாந்த வெளியை நாம் கடந்து செல்கிறோம். வடக்குக்கும் தெற்குக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான பாலமாக நாம் இருக்கிறோம்.


எனவே அந்தக் கண்ணோட்டத்தில், நாம் இன்றைய பிளவுப்பட்ட உலகில் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளோம். இந்த பிளவு, ஜி20 அமைப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருத்தில் நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும்.


மோதல்களைக் குறைத்தல், ஒத்துழைப்பை அதிகரிப்பது, வளர்ச்சியைத் தூண்டுவது, கடனை குறைப்பது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, சர்வதேச நிறுவனங்களைச் சீர்திருத்துவது, பெண்களை முன்னேற்றுவது ஆகியவற்றில் ஜி20 தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள்" என ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.


"டெல்லி ஜி20 உச்சி மாநாடு ஒரு முன்மாதிரி"


ஜி20 வரலாற்றில் முதல்முறையாக உச்சிமாநாட்டில் பங்கேற்காமல் சீன அதிபர் தவிர்த்துள்ளார். இந்திய-சீனா எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்து, பதற்றம் நிலவி வரும் நிலையில், அதன் பிரதிபலிப்பாக சீன அதிபரின் புறக்கணிக்கு பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து பதில் அளித்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, "உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்காதது உச்சி மாநாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில தலைவர்கள் தங்கள் சொந்த காரணத்திற்காக, வர முடியாத சூழல் ஏற்படுகிறது. டெல்லி ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களின் சிறந்த பிரதிநிதித்துவம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 


நாங்கள் மிகவும் நல்ல விவாதங்களை நடத்துவோம். விரும்பிய முடிவுகளைப் பெறுவோம். ஜி20 அமைப்பின் வெற்றியை உறுதி செய்வதில் ஒவ்வொரு நாடும் ஆர்வமாக உள்ளது. டெல்லி ஜி20 உச்சி மாநாடு ஒரு முன்மாதிரியான, குறைபாடற்ற, தனித்துவமான இந்திய உச்சி மாநாட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.


தமிழில் : சுதர்சன்