உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்டதே கொலீஜியம் அமைப்பு. இந்த அமைப்பே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
கொலீஜியம் பரிந்துரைகளை ஏற்க மத்திய அரசு தாமதித்து வருவதாகவும் கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.
கடந்த 15 நாள்களில், நாட்டின் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இருமுறை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். புதிய அமைப்பு உருவாகும் வரை நீதித்துறையின் உயர்மட்டத்தில் நியமனங்களும் காலி பணியிடங்களும் தொடர்ந்து அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
தேசிய நீதித்துறை நியமன ஆணையம் மீண்டும் கொண்டு வரப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்தச் சட்டத்தை ரத்து செய்தது சரியல்ல என்று பல முக்கிய நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, 1,108 நீதிபதி பணியிடங்கள் உள்ளது. அதில், 777 நீதிபதிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் 331 அல்லது 30% காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களில் 147 பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்ற கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையே பல்வேறு கட்ட அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
184 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப கொலீஜியம் இன்னும் பரிந்துரை செய்யவில்லை. 20 பெயர்களை கொலீஜியத்திற்கு அரசாங்கம் திருப்பி அனுப்பிய நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 165 நீதிபதிகளை நியமித்தது. ஒரே ஆண்டில் இவ்வளவு எண்ணிக்கையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டதே இல்லை.
பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியைத் தொடவுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, காலியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச அதிகாரங்களே உள்ளன" என்றார்.