மத்தியப் பிரதேசம், குவாலியர் மாவட்டத்தில் நான்கு கால்களுடன் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா எனும் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் நான்கு கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
2.3 கிலோ எடையுடன் பிறந்த இந்தப் பெண் குழந்தையை குவாலியரில் உள்ள மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவக் குழுவினர் தற்போது பரிசோதித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.கே.எஸ்.தாகத் ஏ.என்.ஐ. நிறுவனத்திடம் பேசுகையில், "பிறந்த குழந்தைக்கு 4 கால்கள் உள்ளன. உடல் ஊனமுற்றுள்ளது. சில கருக்கள் உடைந்து கூடுதலாக வளர்கையில் இவ்வாறு நிகழ்கிறது. இது மருத்துவ மொழியில் இஸ்கியோபாகஸ் (Ischiopagus) என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும்போது, உடல் இரண்டு இடங்களில் உருவாகி வளர்கிறது. இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளன. ஆனால் அந்தக் கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.
தற்போது குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா? எனப் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பின் குழந்தை நலமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம், அந்தக் கால்கள் அகற்றப்படும். அதன் மூலம் குழந்தை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
தற்போது மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை பிரிவில் பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். தற்போது பெண் குழந்தை பூரண நலமாக உள்ளது” என்றார்.
இதே போல், இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் ஒரு பெண்ணுக்கு இரண்டு தலைகள், மூன்று கைகள் மற்றும் இரண்டு கால்களுடன் குழந்தை பிறந்தது. சுமார் 3 கிலோ எடை இருந்த அக்குழந்தை, டைஸ்பாலிக் பாராபகஸ் என்ற என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.