கள்ளச்சாரயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு:


மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


மேலும், மருத்துவமனையில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


இழப்பீடு கிடையாது:


இதற்கு மத்தியில், கள்ளச்சாராய விவகாரம் பீகார் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எந்த வித இழப்பீடும் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


மதுபான பழக்கத்திற்கு எதிராக கடுமையாக பேசிய அவர், "குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது. நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். குடித்தால் செத்து விடுவீர்கள். குடி பழக்கத்திற்கு ஆதரவாக பேசுபவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் பயக்காது" என்றார்.


மது அருந்துவது குற்றம்:


சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் விஜய் குமார் செளதரி இதுகுறித்து கூறுகையில், "பீகாரில் மது அருந்துவது குற்றம், அதனால் ஏற்படும் மரணங்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாது என்பதை பாஜக உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மது அருந்துவதை ஆதரிப்பதற்கு சமமாக இருக்கும்" என்றார்.


வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், "மதுபானம் குடித்தால் இறக்கதான் செய்வார்கள். இதற்கான எடுத்துக்காட்டு நம் கண் முன்னே இருக்கிறது" என்றார்.


பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர் என உயர் மட்ட அரசு அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். ஆனால், 50 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


 






இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் மீனா கூறுகையில், "மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் உள்நாட்டில் காய்ச்சப்பட்ட மதுபானத்தை விற்பனை செய்த 126 வியாபாரிகள் பிடிபட்டுள்ளனர்" என்றார்.


இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக பட்டியலிடப்பட்டது.