டெல்லியை ஒரு மாநாகராட்சியை போல் தரம் குறைக்கும் டெல்லி மசோதா நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற @BJP4India -வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்! மூன்று மாதமாக #Manipur எரிகிறது.






அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.


நிறைவேறிய மசோதா:


தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், ஆளுநருக்கு இறுதி அதிகாரம் வழங்கும் வகையிலும், அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு உருவாக்கியது. இந்த மசோதாவானது கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இருப்பினும், நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி நிர்வாக மசோதவை தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். 


தொடர்ந்து, மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 131 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும்,  102 பேர் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை ஆதரவுடன் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்த மசோதா சட்டமாக டெல்லியில் அமல்படுத்த உள்ளது.