நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1 கோடி மோசடி செய்ததாக இரண்டு பேரை உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்ள வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றவாளிகள், பிரபலமான வலைதள தொடரான ​​"மணி ஹீஸ்ட்" மூலம் ஊக்கம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.


அடையாளம் தெரியாத நபர்கள் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் நொய்டா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்து அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றம் மூலம் 1 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ரித்தேஷ் சதுர்வேதி என்ற அமித் சிங் மற்றும் ரிஷப் ஜெயின் என்ற  பிரின்ஸ் தாக்கூர் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதால் காவல் நிலையப் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் ரீட்டா யாதவ் தெரிவித்துள்ளார்.  


ரீட்டா யாதவின் கூற்றுப்படி, இருவரும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க், டார்க் வெப், போலி அடையாளத்துடன் வாங்கப்பட்ட சிம் கார்டுகள், ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐப் பெறுவதற்கான முறை மற்றும் புகார்தாரரின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைத் திருடியுள்ளனர்.


 "குற்றம் சாட்டப்பட்டவர்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்தி, ரூ. 1 கோடியை வேறு நான்கு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர், மேலும் அந்த நான்கு வங்கி கணக்கும் போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. USDT இல் ஒரு இ-வாலட்டைப் பயன்படுத்தி, பணம் கிரிப்டோகரன்சிகளாக மாற்றப்பட்டதாகவும், சதுர்வேதி மற்றும் ஜெயின் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களில் பிரபலமான க்ரைம் சீரிஸ் ​​"மணி ஹீஸ்ட்" மூலம் தாங்கள் தூண்டப்பட்டதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் 15 க்கும் மேற்பட்ட குழுக்களில் குற்றவாளிகள் வலைத் தொடரின் கதாபாத்திரங்களின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து நடிகர்களின் பெயர்களுடன் சர்வதேச மொபைல் எண்கள் மற்றும் ஃபோன் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் உலக தளங்களில், சதுர்வேதி "professor" என்ற பெயரையும், ஜெயின் "ரியோ" என்ற பெயரையும் பயன்படுத்தியதாக ரீட்டா யாதவ் தெரிவித்துள்ளார்.  அவரது கூற்றுப்படி, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மே மாதம் நடந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவரின் உடைமைகளில் ஒரு கார், ஒரு மடிக்கணினி, 11 மொபைல் போன்கள், 25 சிம் கார்டுகள், 23 டெபிட் கார்டுகள் மற்றும் பிற பொருட்கள் இருந்தன. இந்த வழக்கை வெற்றிகரமாக தீர்த்து வைத்த அதிகாரிகள் குழுவிற்கு 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என உ.பி.யின் சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் திரிவேணி சிங் அறிவித்துள்ளார்.