கொச்சி விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள 649.05 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.


கொச்சி விமான நிலையம்:


அபுதாபியில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம், சுங்க துறை அதிகாரிகள் புதன்கிழமை ( மார்ச் .16 ) சோதனை நடத்தினர்.


அப்போது, சந்தேகத்திற்கினமாக ஒரு பயணி உள்ளாடையை சரி செய்து கொண்டே இருப்பது, சுங்கத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


அதையடுத்து, அந்த பயணியை சோதனை செய்தபோது, பேஸ்ட் வடிவில் 649.05 கிராம் தங்கத்தை, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அதையடுத்து, ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரி பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.


விசாரணையில், தங்க கடத்தலில் ஈடுபட்டவர் சங்காரம்குளத்தைச் சேர்ந்த அக்பர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


3.340 கிலோ தங்கம் பறிமுதல்:


மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதுவரை ஏழு பயணிகளிடமிருந்து 3.340 கிலோ தங்கத்தை  பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மார்ச் 11 அன்று, சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு (ஏ.ஐ.யூ) கொச்சி விமான நிலையத்தில் ரூ .21.5 லட்சம் மதிப்புள்ள 489 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கு முன்பு மலப்புரம் மாவட்டம் வாலாஞ்சேரியைச் சேர்ந்த நாசர் என்பவரிடமிருந்து 224 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265 கிராம் எடையுள்ள காப்ஸ்யூல் வடிவ பாக்கெட் ஆகியவை மீட்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.


விமான ஊழியர் கைது:


முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கத்தை கடத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியரை கேரள சுங்கத் துறை புதன்கிழமை கைது செய்தது.


இதுகுறித்து சுங்கத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் கேபின் க்ரூ உறுப்பினராக பணியாற்றிய வயநாட்டைச் சேர்ந்த ஒருவரை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு (ஏஐயு) புதன்கிழமை கைது செய்தது.


"கைது செய்யப்பட்ட குற்றவாளி பஹ்ரைன்-கொச்சி விமானத்தில் இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தங்கத்தை தனது கைகளில் சுற்றி வைத்திருந்தார் என்று மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறினார்.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர் ஒருவர், கடத்தல் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.