சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவர் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.


கைது


மும்பை - கோவா சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 அக்டோபர் 2ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது சிலர் கொக்கைன், உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த கப்பலில் போதைப் பொருட்களை அதிரடியாக கைப்பற்றினர். சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில், இந்த கப்பலில் இருந்த நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். 



ஜாமீன்


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா, கோமித், மோஹக் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, 21 நாட்களுக்கு பின்னர், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த வழக்கில் ஆர்யன் கான், ஷாருக் கானை பழிவாங்கும் விதமாக வேண்டுமென்றே திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அலையடித்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மரணமடைந்தார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியிருந்து வந்து பிரபாகரிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டுச் சென்ற சில நாட்களில் அவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. 


ஆதாரம் இல்லை


இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை என்று போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்யன் கான் மற்றும் மோஹக் தவிர குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரிடமும் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு நபர்களுக்கு எதிரான புகார், ஆதாரம் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிரபராதி


இந்த வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கைது செய்யப்பட்ட 20 பேரில் ஒருவரான 23 வயதான ஆர்யன் கான் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. மேலும் 5 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கான் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தங்கள் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்.சி.பி. முரண்பாடு


ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என விசாரணையின் போது தெரியவந்ததாக என்.சி.பி., தெரிவித்த நிலையில், அதற்கான ஆதாரங்களையும் என்.சி.பி., தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருந்தது. இந்த பின்னணியில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.