மேற்கு வங்கத்தில் நடிகை பிதிஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தோழியான மஞ்சுஷா நியோகும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும் மாடலுமான மஞ்சுஷா நியோகி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக தொங்கிய மஞ்சுஷாவின் உடலை மீட்ட போலிசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்க உள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே இதற்கான காரணங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
தொடரும் மாடல் மரணங்கள்
சமீப காலமாக பெங்காலி திரை உலகின் மாடல்கள் நடிகைகள் தற்கொலை அதிகரித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி, நடிகை பல்லவி தே தற்கொலை செய்துகொண்டதை அடித்து கடந்த 25ஆம் தேதி வங்காள நடிகையும், மாடலுமான 21 வயதாகும் பிதிஷா டி மஜும்தார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக பல்லவி தே தற்கொலை செய்து கொண்டது குறித்து 'என்னால் நம்பவே முடியவில்லை. பல்லவி மிகவும் தைரியமானவர்' என தனது சமூக வலைப்பக்கத்தில் நடிகை பிதிஷா பதிவிட்டிருந்தார். அவரே தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதோடு நிற்காத அதிர்ச்சி நடிகை பிதிஷாவின் தோழியும், மாடலுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை வரை தொடர்ந்துள்ளது. பிதிஷாவின் நெருங்கிய நண்பர்கள், பிதிஷாவுக்கு அனுபாப் என்ற காதலன் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் நீண்டகாலமாக உறவில் இருந்த நிலையில், காதலன் அனுபாப் மூன்று பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்த விஷயம் தெரிந்த பிதிஷா மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
மஞ்சுஷாவின் தாயார்
மஞ்சுஷாவின் தற்கொலை குறித்து அவரது தாயார் கூறுகையில், "பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறிவந்தார். எப்போதும் அவரைப் பற்றியே பேசி கொண்டு இருந்தார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் மீடியா வரும் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன். ஆனால், அதேபோன்று நடந்துள்ளது" என கதறியபடி வேதனை தெரிவித்தார். காவல்துறையினர் இதற்கு முன்னால் ஏற்பட்ட இரண்டு தற்கொலைகளுக்கும் இதற்கும் சம்மந்தம் உண்டா என்கிற வகையில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050